மேம்பால சீரமைப்பு பணியை சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி நேரில் பார்வை

1 November 2020, 2:57 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் ஆமை வேகத்தில் நடக்கும் மேம்பால சீரமைப்பு பணியை சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆற்றின் நடுவே கட்டப்பட்ட 50 ஆண்டுகள் ஆன மேம்பால மறுசீரமைப்பு பணியை திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி நேரில் பார்வையிட்டார். காமராஜர் காலத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 50ஆண்டுகளுக்கும் மேலான மேம்பாலம் பராமரிப்பு பணிகளை கடந்த ஜூன் மாதம் நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கினர். இந்த நிலையில் இந்த பராமரிப்பு பணிக்காக ரூபாய் 2.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை மேம்பாலப் பணி நிறைவு பெறவில்லை. இதன் காரணமாக, திருவண்ணாமலை, விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் தென்பெண்ணையாற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தரைப்பாலத்தின் வழியே சென்று வருகிறது.

தரைப்பாலத்தில் போதிய இடைவெளி இல்லாததால் அவ்வப்போது வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும், போக்குவரத்து நெரிசலில் சிக்குவதும் வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் நலத்திட்ட உதவிகளை திறந்துவைக்க திருக்கோவிலூர் நோக்கி வந்த திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். இதனை அடுத்து, திருக்கோவிலூர் மேம்பால பணிகளை நேரில் அவர் பார்வையிட்டார். அப்போது, ஒப்பந்ததாரரிடம் மேம்பாலம் மறு சீரமைப்பு பணிக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்றும், எப்பொழுது முடிவடையும் , உடனடியாக பணிகளை முடித்து வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு மேம்பாலத்தை திறக்க வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர், திருக்கோவிலூர் பேருந்து நிலைய நுழைவு வாயில் மற்றும் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட மினி டேங்க் மற்றும் குடிநீர் குழாய்களையும் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக துவங்கி வைத்தார். அதே போல் திருக்கோவிலூர் அடுத்துள்ள ஆவியூர் கிராமத்திலும் மக்களின் பயன்பாட்டிற்காக மினி டேங்க் ஒன்றையும் துவக்கி வைத்தார். இன்று ஒரே நாளில் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சத்திற்கும் மேலான நலத்திட்டங்களை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

Views: - 17

0

0