மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு சிறப்பு கடன் உதவிகளை வழங்கிய அமைச்சர்…

11 August 2020, 11:16 pm
Quick Share

தருமபுரி: பி.செட்டிஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் 10 மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு ரூபாய் 1 கோடியே 95 ஆயிரம் மதிப்பில் சிறப்பு கடன் உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பி.செட்டிஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் 10 மகளிர் சுயஉதவிக் குழுவைச் சார்ந்த 160 உறுப்பினர்களுக்கு ரூபாய் 1 கோடியே 95 ஆயிரம் மதிப்பில் சிறப்பு கடன் உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். பின்னர் விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பேசியதாவது:- தருமபுரி மாவட்டத்தில் 131 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமும் 2 மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு கடன் சங்க மூலமும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், வகையீட்டின் பேரில் விவசாய நகை கடன்கள், பண்ணை சார்ந்த நீண்ட கால கடன்கள், மத்திய கால கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளி கடன் டாப்செட்கோ போன்ற கடன்கள் வழங்கி விவசாயத்திற்கு சேவை செய்து வருகிறது.

2019-2020 ஆம் ஆண்டிற்கு ரூ.260 கோடி ஒதுக்கபட்டு அதில்; 44 ஆயிரத்து 637 விவசாயிகளுக்கு ரூபாய் 314 கோடியே 12 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டிற்கு ரூபாய் 325 கோடி ஒதுக்கபட்டு அதில் கடந்த ஜூலை மாதம் முடிய விகிதாச்சார அடிப்படையில் ரூபாய் 55 கோடியில், விவசாயிகளுக்கு ரூபாய் 39 கோடியே 66 லட்சம் பயிரக்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தவணை தவறாது திரும்ப செலுத்துபவருக்கு 7சதவீதம் வட்டித் தொகை முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டு வட்டியே இல்லாத விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் நடத்தப்படும் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் 449 முழு நேர நியாயவிலைக்கடைகளும், 563 பகுதி நேர நியாய விலைக்கடைகளும், 9 மகளிர் நியாய விலைக்கடைகளும் என ஆக மொத்தம் 1021 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நியாய விலை கடைகளில் 3,89,520 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜீன்’ 2011 திங்கள் முதல் விலையில்லா அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கும் கடனுதவிகளை முறையாக பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்திக்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Views: - 8

0

0