நவீனபடுத்தப்பட்டு வரும் வாரச்சந்தை: பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

24 September 2020, 8:33 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் கொரோனா நோயை கட்டுப்படுத்த மாற்றியமைக்கப்பட்ட வாரச்சந்தை மீண்டும் அதே இடத்தில் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கி சாலை , கால்வாய் வசதியுடன் நவீனபடுத்தப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சந்தைமேடு பகுதியில் வாரச்சந்தை, உழவர் சந்தை, காய்கறி சந்தை, மாட்டு சந்தை ஆகிய சந்தைகளும், தேநீர் கடை, உணவகம், ஆவீன்பாலகம் ஆகியவை இயங்கி வந்தன. இப்பகுதியில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை நடத்தி வந்தனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் வாரந்தை, காய்கறி சந்தை உள்ளிட்ட அனைத்து சந்தைகளும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன. புதூர் பகுதியில் உள்ள கூடுதல் பேருந்து நிலையம், தனியாருக்கு சொந்தமான இடங்களில் சந்தைகள் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டன.

புதிய இடங்களுக்கு மாற்றப்பட்ட காய்கறி சந்தை, வாரச்சந்தைகளில் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் நடைபெறாததாலும், கூடுதல் பேருந்து நிலையத்தில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் பழையபடி சந்தைமேடு பகுதியிலேயே காய்கறி சந்தை, வாரச்சந்தை, உழவர் சந்தை அமைத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக வாணியம்பாடி வியாபாரிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணியிடம் கோரிக்கை மனுவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, சந்தைமேட்டில் பழையபடி வியாபாரிகள் கடைகள் அமைத்துக்கொள்ள ஏற்பாடு செய்யும்படி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணிக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து சந்தைமேடு பகுதியில் கடைகள் அமைத்து ஏற்கனவே நடந்து வந்த அதே இடத்தில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு பேவர் பிளாக் சாலை, கால்வாய் , தெருவிளக்கு கழிப்பிடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கடந்த வாரம் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகள் முழுவதுமாக முடிவடைந்த பின்னர் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் கடைகள் சமூக இடைவெளியுடன் அமைத்துக் கொள்ளவும்,

வியாபாரிகள் நகராட்சி நிர்வாகம் விதிக்கப்படும் விதிமுறைகளுக்கு கட்டுபட்டு வியாபாரம் செய்து கொள்ள வேண்டும் எனவும், நகர மையப்பகுதியில் உள்ள சந்தை மேட்டுப் பகுதியில் போக்குவரத்தினை கட்டுப்படுத்தும் வகையில் மாட்டு சந்தையை வேறு இடத்தில் மாற்றி அமைக்க இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி மற்றும் நகராட்சி ஆணையாளர் சென்ன கேசவன் வணிகர்கள் பலருடன் ஆலோசனை மேற்கொண்டார்.