தனியார் லாட்ஜில் தங்கியிருந்தவர் கொலை : 4 இளைஞர்கள் கைது

Author: Udhayakumar Raman
31 August 2021, 7:58 pm
Quick Share

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை அருகேயுள்ள களஞ்சியம் கார்டன் தெருவில் செயல்பட்டு வரும் என் எஸ் பி ரெசிடென்ஸி என்ற தனியார் தங்கும் விடுதியில் அறை எண் 204ல் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் தங்கியிருந்த கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சின்னம்மா லே அவும் என்ற முகவரியைச் சேர்ந்த லென்னெட் ஃப்ராங்க்ளின் (39) என்பவர் ஆகஸ்ட் 28-ம் தேதி காலை வாயிலும் மூக்கிலும் ரத்தம் கசிந்த நிலையில் அவரது அறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே உடைந்த நிலையில் தலைக்கவசம் கிடந்தது. உடற்கூறாய்வில் அவர் பின்னந்தலையில் கடினமான பொருளால் தாக்கப்பட்டு இறந்துள்ளார் என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இறந்து கிடந்த கென்னெட் ஃப்ராங்க்ளின் அடிப்படையில் சிமெண்ட், ஜல்லிக்கல் போன்ற கட்டுமானப் பொருட்களை ஆர்டர் எடுத்து சப்ளை செய்யும் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார். அதனால் அவர் தொழில் நிமித்தமாக கடந்த சில ஆண்டுகளாக தஞ்சாவூருக்கு அடிக்கடி வந்து விடுதியில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார். கென்னட் ஃப்ராங்க்ளின் மது, மாது மற்றும் போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையானவர். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதைத் தொடர்ந்து அவருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த பாலியல் தொழில் மன்னன் செந்தில் குமார் என்பவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கென்னட் ஃப்ராங்க்ளின் பாலியல் தொழிலில் செந்தில் குமாருக்கு புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார்.

அதனால் செந்தில்குமாரின் ஸ்கூட்டியை கென்னட் ஃப்ராங்க்ளின் பயன்படுத்தி வந்துள்ளார். அந்த அளவுக்கு அவர்கள் இருவருக்கும் இடையே நட்பு இருந்துள்ளது என்கின்றனர் போலீஸார்.விடுதியில் தங்கியிருந்த கென்னட் ஃப்ராங்க்ளின் ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு தஞ்சாவூரைச் சேர்ந்த அவரது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து அவரது அறையில் ஒன்றாக தண்ணியடித்துள்ளார். அவரது அறைக்கு எதிரே உள்ள அறையில் பாலியல் தொழிலாளியான பெண் ஒருவர் தங்கியிருந்துள்ளார். அப்பெண் தொடர்பாக ஃப்ராங்க்ளினுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இச்சம்பவத்தில் நண்பர்களால் கடுமையாக தாக்கப்பட்ட கென்னட் ஃப்ராங்க்ளின் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.

அப்போது அவரது தலையின் பின்புறம் சுவரில் மோதியதில் அவர் மூர்ச்சையடைந்துள்ளார். அதனால் பயந்துபோன அவரது நண்பர்கள் நால்வரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இச்சம்பவம் நள்ளிரவு 12 முதல் 2 மணிவரை நடைபெற்றுள்ளது.கென்னட் ஃப்ராங்க்ளின் அறையிலிருந்து தொடர்ந்து பயங்கர சத்தம் கேட்டு, அதன்பின்னர் நண்பர்கள் நால்வரும் திடீரென வெளியே ஓடியதைக் கண்ட அவ்விடுதியின் காவலாளி இதுபற்றி விடுதி உரிமையாளர் பிரசன்னாவிடம் தெரிவித்துள்ளார். அவர் சென்று பார்த்தபோது கென்னட் ஃப்ராங்க்ளின் வாயிலும் மூக்கிலும் ரத்தம் கசிந்தவாறு இறந்து கிடந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய புலன் விசாரணையில் அந்த நான்கு நண்பர்களும் தஞ்சாவூர் மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவைச் சேர்ந்த தினகரன் (22), ஆடக்காரத் தெருவைச் சேர்ந்த முகமது அஸன் காதர் (24), வரதராஜ பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பிரவீன் குமார் (18), அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த அருண் லிவிங்ஷ்டன் (23) ஆகியோர் என்பதும், அவர்கள் நால்வரும் பாலியல் தொழில் புரோக்கர்கள் என்பதும் தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, அவர்கள் நால்வரையும் போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அதன் பின்னர் அந் நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தனக்காக நண்பர்களுக்குள் தகராறு மற்றும் கைகலப்பு ஏற்பட்டு அதில் ஒருவர் கொலையானதைத் தொடர்ந்து, எதிர் அறையில் தங்கியிருந்த பாலியல் தொழிலாளியான அப்பெண் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதற்கிடையே, தஞ்சாவூர் மானோஜிபட்டி இந்திரா நகரைச் சேர்ந்த கிளிங்டன் என்ற 23 வயது இளைஞரை பாலியலுக்கு அழைத்ததாக வல்லம் பகுதியைச் சேர்ந்தவரும் என் எஸ் பி ரெசிடென்ஸி என்ற தங்கும் விடுதியின் உரிமையாளருமான பிரசன்னா(50), அவ்விடுதியின் காவலாளியும் சூரக்கோட்டையை அடுத்துள்ள மடிகையைச் சேர்ந்தவருமான கருணாநிதி (65) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவ்வருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

Views: - 182

0

0