நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்:கூடுதல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை

25 August 2020, 9:38 pm
Quick Share

மயிலாடுதுறை: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேக்கமடைந்து அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைவதால் கூடுதல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நல்லத்துக்குடி, செருதியூர், முளப்பாக்கம், கோடங்குடி உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இதனால், தினசரி சராசரியாக 2 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் நெல் கொண்டு வரப்படுகிறது. ஆனால், தினசரி 800 மூட்டைகள் மட்டுமே இங்கு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் கூடுதலாக கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திலேயே விவசாயிகள் அடுக்கி வைத்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று பெய்த திடீர் மழையால் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. மேலும், இம்மழையால், கொள்முதல் நிலையத்துக்கு செல்லும் பாதை சேறும், சகதியாக மாறியுள்ளது. இதனால், விவசாயிகள் தங்கள் நெல்லை டிராக்டர்களில் கொண்டுவருவதிலும், கொள்முதல் செய்த நெல்லை லாரிகளில் ஏற்றிச்செல்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, அருகாமையில் உள்ள கிராமங்களில் தற்காலிகமாக மற்றொரு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை நிலுவை இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும், கொள்முதல் நிலையத்துக்கு செல்லும் பாதையை சீரமைத்து தரவும் வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 27

0

0