பெண் தலைமை காவலர் வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் தங்க நகைகள் கொள்ளை

7 August 2020, 11:10 pm
Quick Share

கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அருகே பெண் தலைமை காவலர் வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் மேட்டு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் உஷா. இவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். பின்னர் இன்று மாலை வீடு திரும்பினார். அப்போது பெண் தலைமை காவலர் உஷாவின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் வைத்து இருந்த 12 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி பெண் தலைமை காவலர் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். பெண் தலைமை காவலர் வீட்டில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.