ராமகிருஷ்ணா கல்லூரியில் தேசிய நாட்டுநலப்பணித்திட்ட தின கருத்தரங்கம்
24 September 2020, 8:47 pmகோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணித்திட்ட தினம் இன்று கொண்டாடப்பட்டது.
தேசிய நாட்டு நலப்பணித்திட்ட தினத்தை முன்னிட்டு கல்லூரியின் என்.எஸ்.எஸ். சார்பில் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கைக் கருத்தரங்கம் இணையவழியாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக நடந்து முடிந்த குடிமைப்பணிக்கான (ஐ.ஏ.எஸ்) தேர்வில் வெற்றி பெற்ற பூர்ண சுந்தரி கலந்து கொண்டார். மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுச்சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கருத்தரங்கில் இவர் பேசும்போது, “மாற்றுத்திறனாளியான நான் இச்சாதனையினைச் செய்ய நாட்டுநலப்பணித்திட்ட மாணவியாக இருந்ததே மிக முக்கியக் காரணம்.
விவேகானந்தர், காமராசர், அப்துல்கலாம் ஆகியோரை மாணவர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, நேரத்தை முறையாகப் பயன்படுத்தி, சமூக பொறுப்புடன் செயல்பாட்டால் தங்கள் வாழ்க்கையில் வரலாறு படைப்பதோடு, வலிமையான தேசத்தையும் அவர்களால் உருவாக்க முடியும்” என்றார். இந்நிகழ்வில் பாரதியார் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் & செயலர் பி.எல்.சிவக்குமார், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.