தாமிரபரணி கருமேனியாறு இணைப்புத் திட்டத்தை முடக்க நினைக்கிறார்:சபாநாயகர் அப்பாவு மீது முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை பரபரப்பு குற்றச்சாட்டு

Author: Udayaraman
29 July 2021, 4:29 pm
Quick Share

நெல்லை:தனியார் கனிமவள நிறுவனம் பாதிக்கும் என்பதற்காக ராதாபுரம் தொகுதியில் நடைபெற்று வரும் தாமிரபரணி கருமேனியாறு இணைப்புத் திட்டத்தை முடக்க நினைக்கிறார் எனசபாநாயகர் அப்பாவு மீது முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை குற்றச்சாட்டியுள்ளர்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்தித்து தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து இன்பதுரை பத்திரிக்கையாளர்களை அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ராதாபுரம் தொகுதியில் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத் திட்டத்தை நான்கு கட்டங்களாக நிறைவேற்ற இருந்தது. 2006 முதல் 2011 வரையிலான திமுக அரசு இரண்டு கட்ட பணிகளை நிறைவேற்றியது. மூன்றாம் நான்காம் கட்ட பணிகளை விரைவாக செயல்படுத்த அதிமுக அரசு 400 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கியது.

மூன்றாம் கட்ட பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், 4ம் கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நான்காம் கட்ட பணிகளே நடைபெறவில்லை என்று சொல்லி தான் திமுக பிரச்சாரம் செய்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் திட்டத்தை ஆய்வு செய்த சபாநாயகர் அப்பாவு, 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றதாக கூறினார். எனவே அவர் பதவிக்கு வந்த 15 நாட்களில் 30 சதவீதம் பணிகள் நடைபெற்றதை அவரே ஒப்புக்கொண்டார். நான்காம் கட்ட பணியின் இறுதியாக எம்.எல்.தேரியில் தண்ணீர் தேக்க வேண்டும். ஆனால் அங்கு சபாநாயகர் அப்பாவுக்கு நெருக்கமான பிரபல கனிமவள நிறுவனம் இருப்பதால் அந்நிறுவனம் பாதிக்கக்கூடாது என்பதற்காக அத்திட்டத்தை மாற்றி அமைத்து வேறு குளங்களுக்கு தண்ணீர் செல்ல திமுக அரசு முயற்சி எடுத்து வருவகிறது.

திசையன்விளை மக்களை வஞ்சிக்கும் வகையில் இந்த திட்டத்தை முடக்க சபாநாயகர் முயற்சிக்கிறார். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரையாற்றின் மூலம் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை நீரேற்றம் செய்து ராதாபுரம் கால்வாயில் கொண்டுவரும் திட்டத்தை செயல்படுத்த அதிமுக அரசு 169 கோடி நிதி ஒதுக்கி அத்திட்டத்தை செயல்படுத்த அரசாணை பிறப்பித்தது. நீரேற்றம் செய்தற்கான பணிகள் குடிநீர் வாரியம் மூலம் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அந்த திட்டத்தை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சபாநாயகர் செயல்பட்டு வருகிறார். அதாவது அங்கு நீரேற்றம் செய்ய ஆண்டுதோறும் மின்சார கட்டணமாக 4 கோடி ரூபாய் வரும் என்பதால் அங்கு காற்றாலைகள் அமைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் தற்போது காற்றாலைகள் அமைக்க கூடாது என்றும்,

அதற்குப் பதில் அருகில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து ஆண்டுதோறும் 4 கோடி ரூபாய் பணம் கேட்க வேண்டும் என்று சபாநாயகர் கூறியுள்ளார். எந்த ஒரு தொழிற்சாலையும் சிஎஸ்ஆர் நிதி என்பது ஒரு முறை தான் கொடுப்பார்கள். எனவே நடக்காத விஷயத்தை கூறி திட்டத்தை முடக்க திமுக அரசு முயற்சிக்கிறது. மேலும் நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் நிறைந்த பகுதியான ராதாபுரம் தொகுதியில் 10 கோடி ரூபாய்க்கு அருவிக்கரையில் மீன்பிடி துறைமுகம் அமைக்க அதிமுக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால் இந்த அரசாணையை ரத்து செய்து திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என திமுக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.

எனவே இந்த மூன்று திட்டங்களும் முடங்கி விடக்கூடாது என்று கோரி மாவட்டத்தின் ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளேன். தமிழ்நாடு ஆளுநரை சந்தித்தும் இது தொடர்பாக மனு அளிக்க உள்ளேன். தனியார் சபாநாயகர் பணக்காரர்களுக்கு ஆதரவாக தான் செயல்படுவார். அதனால் தான் கனிமவள நிறுவனத்துக்கு ஆதரவாக திட்டத்தை முடக்க பார்க்கிறார். மேலும் ராதாபுரம் தொகுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்காக வார்டு சீரமைப்பு என்ற பெயரில் வார்டை சீரழித்து வருகிறார்கள் என்று இன்பதுரை கூறினார். அதேசமயம் இன்பதுரை தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சபாநாயகர் மீது குற்றம் சுமத்துவதாகவும், திமுக தரப்பு தெரிவிக்கிறது. ஏற்கனவே கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது தபால் வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்து இன்பதுரை வெற்றி பெற்றதாக தற்போதைய சபாநாயகர் அப்பாவு வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக இருவருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த சூழ்நிலையில் நடைபெற்ற முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அப்பாவு வெற்றி பெற்று சபாநாயகராக பொறுப்பேற்ற நிலையில், முதல் முறையாக இன்பதுரை அவர்மீது குற்றம் சுமத்தி புகார் மனு அளித்த சம்பவம் நெல்லை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 97

0

0