விநாயகர் சதுர்த்தி விழாவை தடையை நிவர்த்தி செய்ய வேண்டி பிரார்த்தனை போராட்டம்

Author: Udhayakumar Raman
2 September 2021, 7:31 pm
Quick Share

நெல்லை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நிவர்த்தி செய்ய வேண்டி நெல்லை நெல்லையப்பர் கோவில் முன்பு இந்து அமைப்பினர் பிரார்த்தனை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டு மதுக்கூடங்கள் திரையரங்குகள் பள்ளிகள் இயங்கும் நிலையில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தவும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போராட்டத்தை இந்து முன்னணி தலைமை அறிவித்தது.

அதன்படி நெல்லை நெல்லையப்பர் கோவில் முன்பு இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் இந்து முன்னணியினர் பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்த தமிழக அரசு விதித்த தடையை நிவர்த்தி செய்ய வேண்டி விநாயகர் நாமம் சொல்லி பிரார்த்தனை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இந்து அமைப்பினர் நெல்லையப்பர் கோவிலை வலம் வந்து கோரிக்கை மனு வைத்து சுவாமி நெல்லையப்பர் இடம் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் தமிழக அரசு அனுமதி அளிக்காவிட்டாலும் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்படும் எனவும் நாளைய தினம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Views: - 117

0

0