திருமண நாளில் மனைவி குழந்தைகளுக்கு புது துணி எடுக்க முடியாத சோகத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை
21 January 2021, 11:08 pmகன்னியாகுமரி: திருமண நாளில் மனைவி குழந்தைகளுக்கு புது துணி எடுக்க முடியாத சோகத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே காணிமடத்தைச் சார்ந்தவர் முருகன்(33). இவரது மனைவி ராஜேஸ்வரி 29. ராஜேஸ்வரி அஞ்சுகிராமம் பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்களை மேற்பார்வை செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் முருகன் தெற்கு பஜாரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண்மகன் உண்டு. தற்போது ராஜேஸ்வரி 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக தொழில் சரியாக இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் முருகன் ராஜேஸ்வரியிடம் இன்று நமக்கு திருமண நாள், அதற்கு உனக்கும் பிள்ளைக்கும் துணி எடுக்க என்னிடம் பணம் இல்லை என புலம்பிக் கொண்டு இருந்துள்ளார்.பின்னர் திடீரென எழுந்து வீட்டின் மாடியில் உள்ள படுக்கை அறைக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மனைவி கணவரை தேடி மாடிக்கு சென்று பார்த்தபோது படுக்கை அறையில் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
பதறிய மனைவி ராஜேஸ்வரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அஞ்சுகிராமம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராஜேஸ்வரி அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0