பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

Author: Udhayakumar Raman
25 July 2021, 1:56 pm
Quick Share

தருமபுரி: கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் சில தினங்களாக கனமழை பெய்து வருவதின் காரணமாக கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகபடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளிலிருந்து தமிழகத்திற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு 36 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இந்த நீரானது தமிழக எல்லையான பிலிகுண்டுவிற்கு இரண்டு நாட்களில் வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பிலிகுண்டுலு பகுதியில் நேற்று மாலை 22 ஆயிரம் கன அடியிலிருந்த நீர்வரத்து தற்போது அதிகரித்து 30 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து, மேலும் அதிகரிக்கும் என்பதால் அருவிக்குச் செல்லும் நடை பாதையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 161

0

0