வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

Author: Udhayakumar Raman
31 July 2021, 5:29 pm
Quick Share

சேலம்: சேலத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மூன்று தலைமுறையாக வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அருகே வெள்ளக்கல்பட்டி உடைந்த பாலம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் வசிக்கும் நபர்கள் வீட்டை காலி செய்யுமாறு சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர். இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பகுதியில் விவசாயம் பார்த்து வாழ்க்கை நடத்தி வரும் தாங்கள் அங்கிருந்து வெளியேறினால் வேலை இழந்து வருமானம் இன்றி தவிக்கும் சூழல் ஏற்படும் என்பதால் தமிழக அரசு அதே இடத்தில் நாங்கள் குடியிருக்க அனுமதி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீறி அரசு எங்களை வெளியேற்ற முயன்றால் அனைவரும் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என அப்பகுதி பொதுமக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த பொது மக்களை நேரில் சந்தித்தார். அப்போது அவர் பொதுமக்களை சமாதானப்படுத்தி அவர்களது பிரச்சினைக்கு உரிய தீர்வு ஏற்படுத்திக் கொடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் காலை முதல் பிற்பகல் வரை காத்திருந்த பொதுமக்களுக்கு மதிய உணவிற்கு தனது சொந்த தொகையை வழங்கி அனைவரும் உணவருந்தி செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Views: - 140

0

0