மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு: கனிம வளத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு…

4 August 2020, 3:51 pm
Madurai HC- updatenews360
Quick Share

மதுரை: பட்டா நிலத்தில் மணல் அள்ளுவதற்கு அனுமதி பெற்று சட்டவிரோதமாக அளவுக்கதிகமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், சிவகங்கை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் பச்சேரியை சேர்ந்த தர்மராஜ் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சிவகங்கை மாவட்டம் பச்சேரி கண்ணூர் பகுதிகளில் விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் பகுதியில் உள்ள நஞ்சை மற்றும் புஞ்சை பகுதிகளில் ஏராளமானோர் பரவலாக விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலையில் எங்கள் பகுதியில் வசித்து வரும் கண்ணூர் ராஜேந்திரன் என்பவருக்கு அவரது பட்டா நிலத்தில் மண் அள்ளுவதற்கு மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது .இந்த அனுமதியில் ஒரு குறிப்பிட்ட அளவுகளில் மட்டுமே அள்ளிக் கொள்ள வழிவகை உள்ளது . மேலும் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மிகாமலும், சிறிய இயந்திரங்கள் மூலம் தினமும் குறைந்தது ஐந்து லாரிகள் மட்டுமே மணல் அள்ளி கொள்ளுவதற்கு அனுமதி உள்ளது.

ஆனால் இந்த அனுமதியை பெற்றவர்கள் சட்டவிரோதமாக மிகப்பெரிய ஜே.சி.பி போன்ற இயந்திரங்கள் மூலம் மணலை டாரஸ் போன்ற பெரிய லாரிகளில் மூலம் மண்ணை அள்ளி கடத்திச் செல்கின்றனர். இதனால் விவசாய நிலங்களில் மட்டுமல்லாது நீர்பிடிப்பு பகுதியான கண்ணூர் கண்மாய் வெங்கட்டி ஆறு, பாப்பாகுடி கண்மாய் போன்ற பல பகுதிகளும் நீரின்றி வறண்டு வருகின்றன. ஏற்கனவே நீதிமன்றம் பலவகையிலும் அறிவித்திருந்த போதிலும் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் பட்டா நிலங்களில் மண் அள்ளுவதற்கு தொடர்ச்சியாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏற்கனவே மழை மறைவு பிரதேசமான எங்கள் பகுதி மேலும் வறண்டுவிடும் அபாயத்தில் உள்ளது. இந்த மனுவில் அனுமதி பெற்றுள்ள ராஜேந்திரன் என்பவர் 10 நாட்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையிலும் 40 நாட்களுக்கு மேலாக மிகப்பெரிய லாரிகள் மூலம் மண்ணை அள்ளி கடத்தி வருகின்றனர்.

எனவே இதனை தடுக்க நீதிமன்றம் சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும். இதே போல தென் மாவட்ட ஆட்சியர்களுக்கும் மண் அள்ளுவதற்கு தடை விதிக்கும் வகையில் உத்தரவை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், சிவகங்கை மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குனர், புகாரில் கூறப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.