கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக அசைவ உணவுகள் வழங்க உத்தரவு…

11 August 2020, 10:29 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நிதியாக மத்திய அரசு 25 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும், கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக அசைவ உணவுகள் வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 276 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா நிதியாக 50 கோடி ரூபாய் கேட்கப்பட்ட நிலையில் இந்திய அரசு 25 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகவும், இதில் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கிய 3 கோடியே 6 லட்சம் ரூபாய் அனைத்தும் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும்,

மேலும் 25 கோடி ரூபாய் கொரோனா நிதியாக வழங்க வேண்டும் என இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார். மேலும் கதிர்காமத்தில் உள்ள அரசு கோவிட் மருத்துவமனையில் 2-வது முறையாக ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகள் கேட்கப்பட்டதாகவும், கழிப்பறைகள் அனைத்து சுத்தமாக உள்ளதாக கூறினார். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக அசைவ உணவு வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், கூடுதலாக பணம் செலவு ஆனாலும் அதை பற்றி கவலைப்பட வேண்டாம் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.