கோவை- மஞ்சூர் சாலையில் குட்டியுடன் வலம் வரும் காட்டுயானைகள்: வனத்துறை எச்சரிக்கை…!!

7 February 2021, 2:05 pm
elephant - updatenews360
Quick Share

கோவை: கோவை -மஞ்சூர் சாலையில் குட்டியுடன் காட்டுயானைகள் நடமாடுவதால் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் சுமார் 10கும் மேற்பட்ட காட்டு யானைகள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளது. கெத்தையை சுற்றிலும் உள்ள வாழை, பாக்கு மற்றும் மலைக்காய்கறி தோட்டங்களில் காட்டுயானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதுடன் நடுரோடுகளில் நின்று வாகனங்களை வழிமறிப்பது வாடிக்கையாக உள்ளது.
அவ்வப்போது இந்த யானைகள் இடம் பெயர்ந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் கூட்டத்தில் உள்ள பெண் யானை ஒன்று சமீபத்தில் குட்டி ஈன்றுள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களாக யானைகள் குட்டியுடன் நடமாடி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் மஞ்சூரில் இருந்து கோவைக்கு சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனங்களை குட்டியுடன் வந்த 5 காட்டு யானைகள் வழி மறித்துள்ளது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடுரோட்டில் யானைகள் வழி மறித்து நின்றதால் அச்சம் அடைந்த சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை திருப்பி மீண்டும் மஞ்சூர் சென்று குன்னுார் வழியாக கோவைக்கு சென்றனர். இதுகுறித்து குந்தா ரேஞ்சர் சரவணன் கூறிகையில், கோவை- மஞ்சூர் சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது. குட்டியுடன் யானைகள் நடமாடுவதால் இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். வழியில் யானைகள் எதிர்பட்டால் வாகனங்களை தொலைவிலேயே நிறுத்த வேண்டும்.

யானைகளை கண்டவுடன் கூச்சலிடுவது, வாகனங்களில் இருந்து இறங்கி செல்போன்களில் போட்டோ மற்றும் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடகூடாது. யானைகள் சம்பவ இடத்தில் இருந்து வனப்பகுதிக்குள் செல்வதை உறுதி செய்த பிறகே வாகனங்களை எடுத்து செல்ல வேண்டும். வனத்துறையினரும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

Views: - 0

0

0