அம்மா மினி கிளினிக்கிற்கு பதிலாக மண்டல அலுவலகம்… பொதுமக்கள் கடும் எதிர்ப்பு… ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை

Author: Babu Lakshmanan
25 May 2022, 9:42 am
Quick Share

காஞ்சிபுரம் : அம்மா மினி கிளினிக் செயல்பட்டு வந்த இடத்தில் மாநகராட்சியின் மண்டல அலுவலகம் வரப்போவதை எதிர்த்து அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட “ஓரிக்கை 46 வது வார்டில்” சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் நெசவுத் தொழில், கூலித்தொழில், சுயதொழில் போன்றவை செய்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளாக ஆரம்ப துணை சுகாதார மையம் செயல்பட்டு வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அம்மா மினி கிளினிக் ஆக மாற்றி ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்த உடனே மிக சிறப்பாக செயல்பட்டு வந்த அம்மா மினி கினிளிக்கை இழுத்து மூடினர். அதனால் அந்த பகுதி மக்கள் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் மிகவும் அவதியுற்றனர். மேலும் 6 கிலோமீட்டர் தூரத்திலுள்ள காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையை நாடும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், அந்தப் பகுதியில் மாநகராட்சி மண்டல அலுவலகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் மத்தியில் தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், இல்லையேல் மினி கிளினிக் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் கயல்விழி சூசையப்பர், மக்களிடையே கூறும்போது, இந்த பகுதியில் ஆரம்ப துணை சுகாதார மையம் அமைக்க மாமன்ற கூட்டத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க போராடுவேன், என உறுதி அளித்தார்.

நமது செய்தியாளர் அந்தப்பகுதியில் செய்தி சேகரிப்பதை கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி ஆணையர் நாராயணன் , தன்னுடன் வந்த “48வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் எஸ்கேபி.கார்த்திக்கிடம், “இந்த இடத்தை இடித்து விடுங்கள், புதிதாக வேறு கட்டிடம் கட்டி நமது அலுவலகத்திற்கு பயன்படுத்திக் கொள்வோம் என கூறியதை கேட்டு அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

இதைப் பற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது, அம்மா மினி கிளினிக் செயல்பட்டு வந்த இடத்தில் ஆரம்ப துணை சுகாதார மையம் அமைக்க வேண்டும். அப்படி அமைக்காமல் மாநகராட்சி மண்டல அலுவலகம் அமைத்தால், நாங்கள் கண்டிப்பாக கடுமையாக போராடுவோம், என உறுதியுடன் தெரிவித்தனர்.

Views: - 422

0

0