மண்ணோடும் மழை நீரோடும் மூழ்கிய நெற்பயிர்கள்: கண்டுக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்;விரக்தியின் உச்சம் தொட்ட குமரி விவசாயிகள் …

Author: Udhayakumar Raman
16 October 2021, 11:29 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் மழை நீரில் மூழ்கி நாசமாகியுள்ளது‌.

குமரி மாவட்ட விவசாயத்தில் முதன்மை வாய்ந்ததாக விளங்குவது நெற்பயிர் ஆகும். ஏனெனில் நெற்பயிர் விவசாயம் லாபத்திற்காக இல்லாமல் உணவுக்காகவே பயிர் செய்யப்படுகிறது.குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை நெற்பயிர்கள் ஆண்டுக்கு இரு போகமாக விளைவிக்கப்படுகிறது. இதில் ஒன்று கும்பப் பூ,மற்றொன்று கன்னிப்பூ சாகுபடியாகும். இதில் கன்னிப்பூ சாகுபடி 120 நாள் பயிராக பயிரிடப்படுகிறது .இந்நிலையில் கன்னிப்பூ சாகுபடியாக பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பே முழு விளைச்சல் பெற்றும் , மாவட்டத்தில் கடந்த 17 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது;-குமரி மாவட்டத்தில் தேரூர், தேவகுளம், விளக்கனார்குளம், ஞானப்பழம், இராமன் புதூர் குள பாசனத்தில் விளைவிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தற்போது வரை அறுவடை செய்ய முடியாமல் மழை நீரில் மூழ்கி நெற்கதிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் இருக்க மழை மட்டும் காரணம் இல்லாமல் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடும் ஒரு காரணமாக விளங்குகிறது.மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர் பயிரப்படும் நிலையில் நெற்பயிரை அறுவடை செய்ய ஒரு அறுவடை இயந்திரம் கூட கிடையாது என்பது வருந்தத்தக்கது.

அறுவடை இயந்திரத்திற்காக வெளியூரில் இருந்து வருபவர்களிடம் குமரி மாவட்ட விவசாயிகள் கைகட்டி நிற்ப்பது வேதனையான விஷயமாகும்.டிராக்டர் ,டிரில்லர் போன்ற விவசாய இயந்திரங்கள் வாங்க மாவட்ட நிர்வாகம் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் வழங்கி ஊக்குவிப்பது போல் அறுவடை இயந்திரம் வாங்க விவசாயிகளை ஊக்குவிக்காமல் இருப்பது ஏன்.ஆண்டு தோறும் எங்களுக்கு இதே பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.இனி வரும் காலங்களிலாவது மாவட்ட நிர்வாகம் அறுவடை இயந்திரங்கள் வாங்க விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்.அவ்வாறு செய்தாலே நெற்பயிர் விவசாயத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறையும். ஏற்கனவே வருவாய் இன்றி தவிக்கும் எங்களுக்கு நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் இருப்பது விரக்தியின் உச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாய தொழிலை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 367

0

0