13 வயது சிறுவனின் மரணம் குறித்த வழக்கு: பதில்மனு தாக்கல் செய்ய பழனி காவல் ஆய்வாளருக்கு உத்தரவு…

13 August 2020, 9:37 pm
HC Madurai 01 updatenews360
Quick Share

மதுரை: பழனி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் மரணம் குறித்த விசாரணை தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய பழனி காவல் ஆய்வாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள சின்னகலையம்புத்தூரைச் சேர்ந்த சேதுபதி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” நானும் எனது மனைவியும் இப்பகுதியிலுள்ள மில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறோம். எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இதில் 13 வயதாகும் மகன்( மோகன் குமார்) இப்பகுதியில் ஒரு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தான்.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்தான். கடந்த 24 ஆம் தேதி நானும் எனது மனைவியும் வேலைக்கு சென்று விட்ட நிலையில், எனது மூத்த மகளிடம் போன் செய்து எனது மகன் எங்கே? என்று கேட்டோம். அதற்கு அவர் காலையில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவித்தார். உடனடியாக நானும் எனது மனைவியும் வீடு திரும்பி அவனை பல இடங்களில் தேடினோம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் காலையில் அவன், அருகே உள்ள சிட்டிபாபு என்பவரது வீட்டில் பிணமாக கிடந்து கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவனின் உடலில் கழுத்து உட்பட பல இடங்களில் காயம் இருந்தது. அவனது கையில் ஒரு புது பிளேடு வைக்கப்பட்டிருந்தது. அவன் மின்சாரம் தாக்கியது போல் எரிந்த நிலையிலும் கிடந்தான். இதுகுறித்து நாங்கள் பழனி தாலுகா அலுவலக காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். நாங்கள் விசாரித்த போது, சிட்டிபாபுவும் அவனது பெற்றோரும் எனது மகனை காலையிலிருந்து வேலை வாங்கியுள்ளனர். மேலும் இரவு அவனுக்கு உணவு கொடுத்துள்ளனர். அதன் பின்னரும் அவனை வேலை செய்யச் சொல்லி துன்புறுத்தியுள்ளனர். ஆனால் அவன் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் எனது மகனை சிட்டிபாபுவும், அவனது பெற்றோரும் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்ததால் அவனை தூக்கி சென்று வீட்டின் மாடியிலிருந்து கீழே தள்ளியுள்ளனர். இதில் எனது மகன் உயிரிழந்துள்ளான். இதன்பின்னர் அவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது போன்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர். இது குறித்து பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்து, கொலை வழக்காகப்பதிவு செய்ய கூறிய போது அங்கிருந்த காவல் ஆய்வாளர், சந்தேக மரணம் என மட்டுமே பதிவு செய்துள்ளார். இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியும், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும். மேலும் எனது மகனின் பிரேத பரிசோதனையை மூன்று டாக்டர்கள் கொண்ட குழு மறுபிரேத பரிசோதனை செய்யவும் அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் சிறுவனின் இறப்பு தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது. அரசுத்தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி வழக்கு விசாரணை குறித்து,பழனி காவல் ஆய்வாளர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.