ரியல் எஸ்டேட் அதிபர்களை காரில் விரட்டி சென்று கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் கைது

20 April 2021, 9:54 pm
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே குடும்பத்துடன் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த ரியல் எஸ்டேட் அதிபர்களை சுமார் 25 கிலோமீட்டர் தூரம் காரில் விரட்டி சென்று கொலை மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோயில் பகுதியில் டாக்டர்.துரை சண்முகமணி தன்னுடைய மனைவி மனோகரி உடன் வசித்து வருகிறார். டாக்டர்.துரை சண்முகமணி பாஜக கட்சியின் பிரமுகராகவும், மனோகரி பாஜக கட்சியின் சார்பு வழக்கறிஞராகவும் உள்ளனர். துரை சண்முகமணியின் அண்ணன் உதயகுமார் பெருங்களத்தூர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் . இவர்கள் இருவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர் . இவர்களுக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் நிர்வாகி ராஜா என்பவர் இடைத் தரகராக செயல்பட்டு வந்தார். ராஜா விற்க்கும் இவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரு கோஷ்டிகளாக ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்தனர்.

கூவத்தூர் பகுதியில் ஓரு இடத்தை பதிவு செய்வதற்காக சண்முகமணி, உதயகுமார் ஆகியோர் தங்களுடய குடும்பத்தினர்களுடன் வந்திருந்தனர். பதிவு அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு தங்களுடைய காரில் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள இல்லத்திற்கு புறப்படும்போது மூவேந்தர் முன்னேற்றக் கட்சியின் நிர்வாகியான ராஜா என்பவர் செல்போனில் மிரட்டி பேசியுள்ளார். அதைப் பொருட்படுத்தாமல் சண்முகமணியும் அண்ணன் உதயகுமாரும் தங்கள் குடும்பத்தினருடன் வந்துகொண்டிருந்தனர். ராஜா மீண்டும் செல்பேசி மூலம் சண்முகமணியை தொடர்பு கொண்டு உங்களை குடும்பத்தினருடன் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலால் அச்சமடைந்த சண்முகமணி காரை கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக ஓட்டிக்கொண்டு வந்துள்ளார்.

ராஜா 2 கார்களில் தன்னுடைய ஆதரவாளர்கள் 20 பேர்களை ஏற்றிக்கொண்டு சண்முகம் மணியின் காரை பின்தொடர்ந்து அவர்களை கொல்லும் முயற்சியில் வேகமாக வந்தனர். இதைக் கண்டு அச்சம் அடைந்த சண்முகமணி குன்னத்தூர், கடும்பாடி, பூஞ்சேரி, மாமல்லபுரம், கோவளம் போன்ற ஊர்களின் வழியாக வேகமாக சென்று கொண்டிருந்த போது பின்தொடர்ந்து வந்த ராஜா கோஷ்டியினர் சண்முகம் மணியின் காரை கோவளம் அருகே மடக்கினர் . கத்திகளுடன் ஆவேசமாக வந்த ராஜா கோஷ்டியினரை கண்டு மிரண்டு போன சண்முகமணி சமயோஜிதமாக செயல்பட்டு காரை நிறுத்துவது போல நிறுத்தி திடீரென கிளப்பிக்கொண்டு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வந்து தஞ்சமடைந்தார். அவர்களை எஸ்பி அலுவலகத்தில் ஆசுவாசப்படுத்தி போலீஸ் பாதுகாப்புக்குடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை மிரட்டல் தொடர்பாக சதுரங்கப்பட்டினம் காவல்நிலையத்தில் சண்முகமணி குடும்பத்தினர் புகார் அளித்துவிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி இடம் பாதுகாப்பு கேட்டனர். இவர்கள் அளித்த புகாரின் பேரில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர் அதனை வைத்து மூவேந்தர் முன்னேற்ற கழக நிர்வாகியும் இடைத் தரகராக செயல்பட்டு வந்த குன்னத்தூர் ராஜா, செல்வம் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 17 கூலிப்படையினரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றார்கள். சினிமாவில் வருவது போல் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 25 கிலோமீட்டர் தூரம் சண்முகமணியின் குடும்பத்தினரை ராஜா கோஷ்டியினர் கொலைவெறியுடன் சேசிங் செய்து காரில் துரத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 27

0

0