ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் செத்து, செத்து பிழைக்கின்றனர் – ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் பேட்டி…

13 August 2020, 10:41 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் செத்து, செத்து பிழைப்பதாக ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர், ஆட்சியரின் நேர்முக உதவியாளரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து தூத்துக்குடி ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் தியாகராஜன் மற்றும் துணைத்தலைவர் பரமசிவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தூத்துக்குடியில் இயங்கி வந்தது. தற்பொழுது ஆலை மூடப்பட்டுள்ளதால் அதனை நம்பி வாழ்ந்த 2,000 குடும்பத்தினருக்கு நேரடியாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தற்பொழுது வரை எந்த நிவர்த்தியும் கிடைக்காமல் இருந்து வருகிறது.

புதிய முதலீட்டாளர்களை தமிழகத்தில்  முதலீடு செய்ய அரசு அழைக்கின்றது. ஆனால் தமிழகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் தயாராக உள்ள கம்பெனிகளை திறக்க நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் தமிழகத்திற்கு புதிய கம்பெனிகள் வர தயங்குகின்றனர். தமிழகத்தில் எந்த ஆலையை தொடங்க நினைத்தாலும் போராட்டம் என புறப்படுவதால் தமிழகத்திற்கு வர வேண்டிய பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டன இதனால் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் தான் பாதிக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி அதன் மூலமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதும், 13 பேரின் உயிர் பறி போனதும் தான் மிச்சம்.  

வேறு எந்த சூழ்நிலையும் இங்கு மாறவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடியதில் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்துள்ளது. இதில் மிகப் பெரிய சதி உள்ளது என கூறுகின்றனர். ஆனால் அது பற்றி எங்களுக்கு தெரியாது. ஆகவே தமிழக அரசு இதை தீவிரமாக கண்காணித்து தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கொரோனா அச்சுறுத்தலான நேரத்தில் யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை கையில் பொருளாதாரமும் இல்லை.

எனவே 20 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தமிழக அரசு தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக 1,200 ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது விருப்ப மனு அளித்துள்ளனர். இதை மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் நேரடியாக அனுப்ப உள்ளோம். ஸ்டெர்லைட் கலவரத்தினால் 13 பேர் உயிரிழந்தது ஒரே நாளில் முடிந்து விட்டது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் அன்றாடம் செத்து செத்து பிழைக்கிறனர். எனவே இந் நிலையினை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்றார்.