எஸ்.பி.ஐ ஏடிஎம்-மில் நூதன பண மோசடி; இளைஞரை கைது செய்து விசாரணை

18 July 2021, 3:33 pm
Quick Share

தேனி: பெரியகுளம் அருகே ஸ்டேட் பேங்க் ஏடிஎமில் பணம் எடுக்க வந்த நபர்களிடம் உதவி செய்வதாக நூதன முறையில் மோசடி செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணை கிராமம், காந்திநகர் தெருவில் வசித்து வரும் முருகேசன் என்பவர் மரம் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று தேவதானப்பட்டி ஸ்டேட் பேங்க் ஏடிஎமில் பணம் எடுக்க வந்துள்ளார். இவருக்கு ஏடிஎமில் பணம் எடுக்க தெரியாத நிலையில் மற்றவரின் உதவியை நாடியபோது அருகிலிருந்த தேவதானபட்டியை சேர்ந்த காமேஸ்வரன் என்ற இளைஞரிடம் ஏடிஎல்மில் 14 ஆயிரம் ரூபாய் எடுத்து தரும்படி கூறியுள்ளார். உதவி செய்த காமேஸ்வரன் 5 ஆயிரம், 5 ஆயிரம் என இரு முறை எடுத்துக் கொடுத்து விட்டு மூன்றாவது முறை எடுத்த 4,000 ரூபாயை தன்னுடைய ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கில் போட்டு விட்டு முருகேசனிடம் பத்தாயிரம் மட்டும் தான் வந்தது மீதி 4 ஆயிரம் வரவில்லை எனக் கூறி அனுப்பி விட்டார்.

மேலும் தேவதானபட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் ஆண்டிபட்டி பகுதியிலுள்ள உறவுக்காரரான செல்வகுமார் என்பவரின் சேமிப்பு கணக்கில் ரூபாய் 1200 ஐ போடும் படி கொடுத்த பணத்தையும், காமேஸ்வரன் தனது சேமிப்பு கணக்கில் போட்டுவிட்டு மேற்படி நபரிடம் கீழே கிடந்த ஏடிஎம் பேப்பர் சிலிப்பை ஒன்றை எடுத்து கொடுத்து ஏமாற்றி விட்டு, நீங்கள் சொன்ன நபரது சேமிப்பு கணக்கில் போட்டு விட்டதாக கூறி அனுப்பிவிட்டார். இந்நிலையில் முருகேசன் என்பவர் அவருக்கு தெரிந்த நபரிடம் தனது செல்போனை கொடுத்து எவ்வளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டுள்ளார்.

செல் போனிற்கு வந்த குறுந்தகவலை பார்த்த நபர் 14 ஆயிரம் ரூபாய் எடுத்ததாக கூறவே, மேற்படி முருகேசன் திரும்பி வரும் போது காமேஸ்வரன் என்பவர் ஏடிஎம் அருகிலேயே இருந்து உள்ளார். அவரை அடையாளம் கண்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் காவல்துறையிணர் சம்பவ இடத்திற்கு சென்று மேற்படி காமேஸ்வரன் என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில், காமேஸ்வரன் 4 ஆயிரம் மற்றும் ஆயிரத்து 200 ரூபாயை தனது சேமிப்பு கணக்கில் போட்டதை ஒப்புக்கொண்டதால் இளைஞர் காமேஸ்வரன் மீது வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் விசாரணையில் வங்கியின் முன்பே இருந்து கொண்டு ஏடிஎமில் பணம் எடுக்க மற்றும் செலுத்த தெரியாத பல நபர்களிடம் தொடர்ந்து மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Views: - 118

0

0