மது அருந்துவதற்கு டம்ளர் வாங்கி தர மறுத்த நபர் கொலை: குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

1 March 2021, 7:53 pm
Quick Share

தேனி: மது அருந்துவதற்கு டம்ளர் வாங்கி தர மறுத்த நபரை கொலை செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியது

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பத்தில் கடந்த 2015 ஆம் வருடம் குடிபோதையில் கம்பம் சுக்காங்கல்பட்டி தெருவைச் சேர்ந்த ஜாபர் மகன் அஜய் (எ) முகமது அல்ஹபிப் என்பவர் அதே பகுதி ஸ்ரீ ரங்கசாமி நந்தகோபால் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இடம் குடிபோதையில் தண்ணீர் பாக்கெட் மற்றும் மது அருந்துவதற்கான டம்ளர் வாங்கி வரச்சொல்லி கட்டாய படுத்தியதில் மணிகண்டன் மறுத்ததால் ஆத்திரமடைந்த முகமது அல்ஹபிப் மற்றும் அவரது நண்பர்கள் மணிகண்டனை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மணிகண்டனை குடிபோதையில் தாக்கிக் கொண்டிருந்த நபர்களிடம் இருந்து மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

அப்போது மணிகண்டன் என்பவருக்கு காது மற்றும் மூக்கு வழியாக ரத்தக் கசிவு ஏற்பட்டதால் மணிகண்டனை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இந்த வழக்கு சம்பந்தமாக கம்பம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேனி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தநிலையில், இன்று நடைபெற்ற இறுதி விசாரணைக்கு குற்றம் நிரூபிக்கப் பட்டதால் குற்றவாளி முகமது அல்ஹபிப்க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மூன்று மாத கூடுதல் தண்டனையும் விதித்து தேனி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி V.ரவிசந்திரன் தீர்ப்பு வழங்கினார்

Views: - 32

0

0