பெரியார் சிலை அகற்றக் கோரிய வழக்கு: புகைப்படங்களுடன் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

26 August 2020, 3:48 pm
HC Madurai 01 updatenews360
Quick Share

மதுரை: திண்டுக்கல், பழனி நகர் பகுதி ரயில்வே பீடர் சாலையின் விரிவாக்க பணிக்கு இடையூறாக இருக்கும் பெரியார் சிலை அகற்றக் கோரிய வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், மண்டல வருவாய் அலுவலர், பழனி நகராட்சி ஆணையர் புகைப்படங்களுடன் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஸ்ரீதர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,”திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப்பகுதியில் ரயில்வே பீடர் சாலை அமைந்துள்ளது. ஒரு கிலோ மீட்டர் தூரம் 23 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சாலையை விரிவாக்கம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சாலையின் இரு புறமும் வடிகாலுடன், நடுவில் பூங்கா மற்றும் தடுப்பு சுவருடன் கூடிய வகையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள், கல்வெட்டுக்கள், பச்சை மரங்கள் சிறிய கோவில்கள் ஆகிய அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில், அங்கு இருக்கக்கூடிய பெரியார் சிலை மட்டும் அகற்றப்படாமல் உள்ளது. அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாக அதிகாரிகளும் சிலையை அகற்றாமல் வடிகால் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். சிலை அகற்றாமல் பணிகளை தொடங்கினால் முழுமையாக பணி நடைபெறாது.

ஆகவே திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதி ரயில்வே பீடர் சாலையின் விரிவாக்க பணிக்கு இடையூறாக இருக்கும் பெரியார் சிலை அகற்றிவிட்டு சாலை விரிவாக்கப் பணியை தொடர அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், மண்டல வருவாய் அலுவலர், பழனி நகராட்சி ஆணையர் புகைப்படங்களுடன் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Views: - 24

0

0