திருச்சியில் பெரியார் சிலைக்கு தடை விதிக்க வேண்டும்:மாவட்ட ஆட்சியரிடம் அர்ஜூன் சம்பத் மனு

Author: Udhayakumar Raman
8 September 2021, 7:31 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் பெரியார் சிலைக்கு தடை விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அர்ஜூன் சம்பத் மனு அளித்தார்.

திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருச்சி சிறுகனூரில் பெரியாருக்கு 100 கோடியில் 95 அடியில் சிலை வைக்கப்படும் என அறிவித்து அதற்கான அனுமதியை பெற்றார்.இதற்க்கு தடை விதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், வாழ்நாள்‌ முழுக்க இந்து கடவுள்களை இழிவு படுத்தி, இந்துதெய்வ நம்பிக்கைகளை புண்படுத்தி பிரச்சாரம் செய்தவர் ஈவேரா. திமுக ஆட்சி வந்தவுடன் வீரமணி‌ அவருடன் ஒட்டிக் கொண்டார். அவருடைய திராவிடர் கழகம், பெரியார் மணியம்மை அறக்கட்டளையில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது.

அதை அவரும் அவரது மகன் அன்பும் நிர்வகித்து வருகின்றனர். எனவே அதையெல்லாம் அரசுடமையாக்க வேண்டும். திருச்சியில் ஈவேராவிற்க்கு சிலை அமைப்பதை இந்து மக்கள் கட்சி எதிர்க்கிறது. மு.க.ஸ்டாலின் வீட்டிலேயே இறைநம்பிக்கை கொண்டவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை சீர் குலைக்கும் வண்ணம் ஈவேராவின் பிறந்தநாளை சமூக நீதி நாள் என அறிவித்திருக்கிறார்கள். படித்தவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றும் முட்டாள்கள் தான் எனக்கு வேண்டும் என்றும் சொன்னவர் ஈவேரா,

சுதந்திர‌ நாளை கருப்பு கொடி ஏற்றி கொண்டாடியவர் ஈவேரா இவரை எப்படி சமூகநீதி காத்தவர் என சொல்ல முடியும். ஈவெராவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய சொல்லி சட்டசபையில் பேசியவர் கருணாநிதி. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்ரீரங்கத்தில் ஈவேரா சிலை வைத்தது போல் மீண்டும் செய்ய பார்க்கிறார்கள். திமுகவில் ஒரு கோடி இந்து பக்தர்கள் இருக்கிறார்கள். ஈவேரா சிலை வைத்தால் திமுகவினர் மனம் புண்படும் என தெரிவித்தார்.

Views: - 132

0

0