வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

1 February 2021, 1:56 pm
Quick Share

நெல்லை: மேலப்பாட்டம் வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் அருள்மிகு வெங்கடாஜலபதி கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கடந்த 30 ம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 31 ம் தேதி காலையில் சாந்தி ஹோமம், பிம்ப சுத்தி ஹோமம், பின்னர் தீபாராதனை பிரசாத விநியோகம் நடைபெற்றது. பின்னர் மாலையில் மூர்த்தி ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை புண்யாகம், உபரிஷ்டாதந்தரம், கடம் புறப்பாடும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக திருக்குருங்குடி இராமானுஜ ஜீயர் கலந்து கொண்டு சிறப்பித்தார் . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் சுஜாதா உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து , சுவாமி தரிசனம் செய்தனர் .

Views: - 0

0

0