தேர்தல் நன்னடத்தை விதிகளை தளர்த்த கோரி அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மனு

Author: kavin kumar
13 October 2021, 7:58 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தேர்தல் நன்னடத்தை விதிகளை தளர்த்தக்கோரி அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் மாநிலத்தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 22ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாகக்கூறி சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ்குமார் உட்பட 3 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து முதல்கட்ட வேட்புமனு தாக்கலான 30ம் தேதி தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. குளறுபடிகளை சரிசெய்து புதிய அறிவிப்பை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடை ரத்து செய்து கடந்த வெள்ளிக்கிழமை 2வது முறையாக தேர்தல் தேதியை அறிவித்தது. இது அரசியல்கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநர் தமிழிசையை சந்தித்து புகார் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் பந்த் போராட்டமும் நடத்தினர்.

திமுக மாநில அமைப்பாளர் சிவா, இடஒதுக்கீடு ரத்து அறிவிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து 21ம் தேதி வரை தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டாலும், நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளது.தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் உத்தரவு வர இன்னும் 10 நாட்கள் உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் தொடருமா என்பது பற்றி மாநில தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்தாமல் தொடர் மவுனத்தில் இருந்தது. இந்நிலையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்று மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸை சந்தித்தனர்.

அப்போது மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாததால் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தக்கோரி ஆணையரிடம் கடிதம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆணையர், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ஆலோசித்து தெரிவிப்பதாக குறிப்பிட்டார் மேலும் அதை கடிதம் வாயிலாக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து தருவதாகவும் ராய் பி தாமஸ் தெரிவித்தார்.

Views: - 199

0

0