புகார் கொடுக்கச் சென்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரரை அவமதித்த போலீசார்: குறைந்தபட்ச மரியாதை வழங்க ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் நல சங்க கோரிக்கை

18 June 2021, 2:59 pm
Quick Share

வேலூர்: புகார் கொடுக்கச் சென்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரரை அவமதித்த போலீசார் குறைந்தபட்ச மரியாதையாவது தரவேண்டும் என்று ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் நல சங்க மாவட்ட தலைவர் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கம்பசமுத்திரம் கிராமத்தில் வசிப்பவர் முன்னாள் ராணுவவீரர் சேட்டு. இவருக்கும் இவரது உறவினரான விஜயன் என்பவருக்கும் ஏற்கனவே பேச்சுவார்த்தை இல்லை. கடந்த 15ஆம் தேதி நடை பயிற்சிக்கு சென்ற ராணுவ வீரர் சேட்டுவை வழி மறித்து தகாத வார்த்தைகளால் பேசி விஜயன் மற்றும் அவரது தம்பி சசி உட்பட பலர் தாக்கியுள்ளனர். தடுக்கச் சென்ற அவரது மனைவியையும் அடித்து கீழே தள்ளியுள்ளனர். இதுகுறித்து சேட்டு கணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்து விட்டு அடுத்த நாள் வயலுக்குச் சென்ற சேட்டுவை எங்கள் மீதா புகார் தருகிறாய் என்று மீண்டும் விஜயனின் உறவினர்கள் கட்டையால் தாக்கி தலையில் பெருங்காயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

ரத்தம் கொட்ட அதே இடத்தில் விழுந்த சேட்டுவை அவரது மனைவி மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மீண்டும், இது குறித்து தகவல் தெரிவிக்க காவல் நிலையம் சென்ற போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மிலிட்டரி காரர்களுக்கு அறிவு கிடையாது உங்களை எல்லாம் ஜெயிலில் போட்டு களி தின்ன வைக்க வேண்டும் என்று பேசியதாகவும், இதனால் மனமுடைந்த அவர்கள் இதுகுறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் சிவக்குமார் இடம் தகவல் அளித்தனர். உடனடியாக அவர் மேல் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் அடிப்படையில் சேட்டுவை தாக்கியவர்களில் மீது வழக்குப்பதிவு செய்து ஒருவரை சிறையில் அடைத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் தலைமறைவாக உள்ளனர். இதுகுறித்து மாவட்ட தலைவர் சிவக்குமார் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜம்புலிங்கம் சட்ட ஆலோசகர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பாதிக்கப்பட்டு தலையில் கட்டுடன் இருந்த சேட்டுவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது சேட்டுவின் மனைவி மகேஸ்வரி கூறும்போது புகார் கொடுக்க சென்றால் பெண் என்றும் பாராமல் என்னையும் கேவலமாக பேசினார்கள். காவல்துறையில் வீட்டில் இருக்கும் பெண்களை இப்படி யாராவது பேச அனுமதிப்பார்களா என்று வேதனையுடன் தெரிவித்தார்.

அதற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் எதற்கும் பயப்படவேண்டாம், மேல் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர் என்று அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு, அங்கிருந்து காவல்துறை அதிகாரிகளிடமும் நாங்கள் வாழ்நாளில் பாதியை ராணுவத்தில் கழித்து விட்டு வருகிறோம். மீதமுள்ள நாட்களை இங்கு மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும் அமைதியாக கழிப்பதற்காக விரும்புகிறோம். அப்படிப்பட்ட எங்களை யாரையாவது தாக்கும்போது, இதுகுறித்து புகாரளிக்க வந்தால் எங்களுக்கு சற்று மரியாதையுடன் நடத்துங்கள். அதிகபட்சமாக நாங்கள் எதிர்பார்ப்பது மரியாதை. சக மனிதருக்கு தரும் மரியாதையை காவல்துறை அதிகாரிகள் எங்களுக்கும் தரவேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அனைத்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தயவுசெய்து எங்களை மரியாதையாக நடத்துங்கள் என்று சிவகுமார் வேதனையுடன் கேட்டுக்கொண்டார். எது எப்படியோ தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. வாழ்நாளில் பெரும்பகுதியை ஊர் உறவுகள் அனைத்தையும் மறந்துவிட்டு நமது பாதுகாப்புக்காக எல்லையில் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ராணுவ வீரர்களை மதிப்புடன் நடத்தாவிட்டாலும் அவமதிக்காமல் இருக்கவேண்டும் என்பதே ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Views: - 387

0

0