குளிர்பானம் குடித்த சில மணி நேரத்தில திடீரென மயங்கி விழுந்த குழந்தைகள்…

Author: Udhayakumar Raman
21 September 2021, 3:31 pm
Quick Share

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இரு சிறுவர்கள் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்த சில மணி நேரத்தில் திடீரென மயங்கி விழுந்து, ரத்த வாந்தி எடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த செந்தில், மாநகரப் பேருந்து ஓட்டுநராக உள்ளார். இவருக்கு லஷ்மன் சாய் என்ற மகன் உள்ளார். அருகிலிருந்த உறவுக்காரரொருவர் இன்று இவர்களை பார்க்க வந்த போது, அவர்களுடைய குழந்தையான ஓமேஸ்வரன் என்ற குழந்தை, லஷ்மன் சாயுடன் இணைந்து விளையாடியுள்ளது. இக்குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டின் அருகிலுள்ள கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர். அதை குடித்த சிறிது நேரத்தில் இருவரும் மயக்கமாகியுள்ளனர். குளிர்பானம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது அவர்கள்மீது கெமிக்கல் வாசனை வந்ததாக பெற்றோர் குறிப்பிடுகின்றனர். வாசனை வந்ததோடு மட்டுமன்றி இருவரும் மயங்கியும் விழுந்தத்தால், இருவரையும் மீட்டு அரசு ஸ்டேன்லி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூக்கில் டியூப் வைத்த சிகிச்சை குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும், அப்படி சிகிச்சையளிக்கும்போது சிறுவர்களுக்கு ரத்த வாந்தி வருவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்பட்டதாக குழந்தைகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதைத்தொடர்ந்து, குளிர்பானம் அருந்தியதால் இந்த நிகழ்வு நடந்ததா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குளிர்பான மாதிரிகளை சேகரித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த சதீஷ் -காயத்ரி தம்பதியின் இளைய மகள் தரணி(13) என்ற சிறுமி, தனது வீட்டின் அருகில் உள்ள மளிகை கடையில் குளிர்பானம் ஒன்றினை வாங்கி குடித்து, வாந்தி எடுத்து மயக்கமடைந்திருந்த சம்பவம் நடந்தேறி இருந்தது. தொடர்ந்து அந்த சிறுமி இறந்திருந்தார் என்பதால், அப்பிரச்னை மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

Views: - 73

0

0