போலீஸ் மோப்ப நாய் சன்னி அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

23 January 2021, 5:48 pm
Quick Share

வேலூர்: வேலூரில் போலீஸ் மோப்ப நாய் சன்னி திடீர் சாவு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்ட போலீஸ் மோப்பநாய் பிரிவில் சிம்பா, சன்னி, லூசி, அக்னி என்ற 4 மோப்ப நாய்கள் வழக்குகள் துப்பு துலக்க பயன்படுத்தி வருகின்றனர். இதில் சன்னி மற்றும் சிம்பா கொலை மற்றும் கொள்ளை சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படுகின்றன. மோப்பநாய் சன்னி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அதனை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது சன்னிக்கு வாயில் புற்றுநோய் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அதற்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் வேலூர் கொண்டு வரப்பட்டது.

பின்னர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சன்னிக்கு சரியாக சாப்பிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கு பால் மற்றும் பிஸ்கட் போன்றவற்றை ஊட்டி வந்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சன்னி இன்று காலை திடீரென இறந்தது. இதனையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சன்னி அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில் கடந்த 2015ஆம் ஆண்டு மோப்பநாய் பிரிவுக்கு சன்னி குட்டியாக கொண்டுவரப்பட்டது. இதற்கு அப்போது வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பகலவன் சன்னி என பெயரிட்டார்.

பல்வேறு வழக்குகளில் துப்பு துலக்குவதற்கு இந்த சன்னி பெரும் உதவியாக இருந்தது. கடந்த ஆண்டு உமராபாத்தில் நடந்த கொலை வழக்கு மற்றும் விருதம்பட்டு வீட்டில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் சன்னியின் பங்கு முக்கியமானதாக அமைந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாயில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளித்தும் இறந்து விட்டது.இதற்கு பதிலாக புதிதாக மோப்பநாய் ஒன்று வாங்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

Views: - 0

0

0