ரவுடிகளை பிடிக்க போலீசார் படையினர் வீடு வீடாக சென்று அதிரடி சோதனை

Author: kavin kumar
30 October 2021, 3:33 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிகளவு குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளை பிடிக்க போலீசார் படையினர் வீடு வீடாக சென்று அதிரடி சோதனையிட்டனர்

புதுச்சேரி வாணரப்பேட்டையில் கடந்த வாரம் இரண்டு ரவுடிகள் வெட்டிப்படுகொலை சம்பவம் புதுச்சேரியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதுச்சேரியில் சமீபகாலமாக கொலை, கொள்ளை வழிப்பறி போன்ற சம்பவங்களில் ரவுடிகள் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. மேலும் தொழில் போட்டி காரணமாக ரவுடிகளுக்குள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு படுகொலை சம்பவங்களும் அரங்கேறி வருவதால் மாநில மக்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் ரவுடிகளை ஒடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் புதுச்சேரி அரசை வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கவும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் காவல் துறை தலைமையகத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் துறை உயரதிகாளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து புதுச்சேரியில் அதிகளவு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 30 ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதனையடுத்து இரட்டை கொலை நடந்த வாணரப்பேட்டை, எல்லைஎல்லையம்மன் கோயில் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் தனிபோலீஸ்படையினர் 100க்கும் மேற்பட்டோர் வீடுவீடாக சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் பட்டியலில் உள்ள பல ரவுடிகள் தலைமறைவாகியுள்ளதாக தெரிகின்றது. போலீசாரின் இந்த அதிரடி சோதனை ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 192

0

0