காந்தி மார்க்கெட்டை திறக்க இல்லையென்றால் சிறை நிரப்பும் போராட்டம்: வெள்ளையன் அறிவிப்பு

2 November 2020, 10:22 pm
Quick Share

திருச்சி: தீபாவளிக்கு முன்னதாக காந்தி மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் வணிகர்கள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்தார்.

திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட செயலாளர் SP.பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் பேசியதாவது:- நேரு, இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் தனியார் நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்பட்டன.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் ரயில்வே, எல்ஐசி, விமானத்துறை போன்ற பொதுத் துறைகளை அந்நியருக்கு விற்று வருகிறார்கள். ஆகவே நாம் ஒரு இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராக வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து சிறை செல்லவும் வணிகர்கள் தயாராக இருக்கிறார்கள். தேவைப்படும்போது சிறை நிரப்பும் போராட்டத்தில் வணிகர்கள் ஈடுபடுவார்கள்.

ஆட்சியாளர்களின், அடாவடி தனத்தை தடுத்து நிறுத்தியாக வேண்டும். அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு வணிகத்தில் சாதகமாக செயல்படுவது மோசடிக்கு சம்மானது. திருச்சியில் உள்ள காந்தி மார்க்கெட் மகாத்மா காந்தி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்திலுள்ள பல்வேறு மார்க்கெட்களை முடக்கி வைத்திருக்கிறார்கள். இயல்பாக செயல்பட்டுவந்த சந்தைகளை அழிக்கப் பார்க்கிறார்கள். இதில் பெரும் பண முதலைகளின் தலையீடு இருக்கிறது.

இன்றைக்கு காந்தி மார்க்கெட் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து பேசினேன், நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கின்றார். ஏற்கனவே இதுதொடர்பாக முதல்வரையும் சந்தித்துப் பேசி இருக்கின்றேன். தீபாவளிக்கு முன்னதாக காந்தி மார்க்கெட்டை திறக்க வேண்டும். இல்லையென்றால் வணிகர்கள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். இதில் நானும் நேரில் பங்கேற்பேன் என்று கூறினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுச்செயலாளர் செல்வம், மாவட்ட தலைவர் ரவிமுத்துராஜா, பொருளாளர் கணேசன் மற்றும் ரயில்வே, எல்.ஐ.சி, விமானத்துறை, தொழிற்சங்க பிரதிநிதிகள் திரளாக பங்கேற்றனர்.

Views: - 17

0

0