புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டியையும் மின்மோட்டாரையும் காணவில்லை: வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் புகார்…

4 August 2020, 5:04 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரம் அருகே கொழுமங்குழி ஊராட்சியில் ரூ 3.50 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டியையும் மின்மோட்டாரையும் கண்டுபிடித்து தரக்கோரிய கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. கொழுமங்குழி ஊராட்சி கள்ளிப்பாளையம் கிராமத்தில் மத்திய அரசின் 14வது நிதிக்குழு மானியம் 2015 -2016 நிதியாண்டில் ரூ 3 லட்சத்து 37 ஆயிரத்து 875 செலவில் கொழுமங்குழி ஊராட்சி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக தரைமட்ட குடிநீர்தொட்டி ஒன்று கட்டப்பட்டு புதிய மின்சார மோட்டார் பொருத்தப்பட்டு அதற்கு எஸ்.எப் – 423 நம்பர் மின் இணைப்பு ஒன்றையும் ஊராட்சி தனி அலுவலரின் பெயரில் பெறப்பட்டுள்ளது.

ஆனால் கொழுமங்குழி ஊராட்சியின் எந்தப் பகுதியிலும் அப்படியொரு தரைமட்ட குடிநீர் தொட்டியோ, மற்றும் மின்சார மோட்டாரோ இல்லை என்று கொழுமங்குழி ஊராட்சி பொதுமக்கள் புகார் எழுப்பியுள்ளனர். மேலும் குறிப்பிடப்பட்ட மின்சார மோட்டாரில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு வீடியோகித்து அதற்கான மின் கட்டணமும், மின்வாரியத்தில் செலுத்தப்பட்டுள்ளதாக கொழுமங்குழி ஊராட்சி ஒன்றிய அலுவலக பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக 3. 37 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட தரைமட்ட குடிநீர் வினியோக தொட்டியையும், அதற்காக பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டாரையும் காணவில்லை, எனவே இவற்றை கண்டுபிடித்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி தலைவர் யோகேஸ்வரன் தலைமையில் குண்டடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர். தங்கள் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டியை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்துள்ளனர்.