தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்கள் வெளியீடு

14 August 2020, 3:56 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை புதுச்சேரி அரசு சுகாதாரத்துதுறை வெளியிட்டுள்ளது. சாதாரண கொரோனா சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு 3,250 ரூபாய் நிர்ணம் செய்துள்ளது.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லை என்பதால் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகளை அரசு உருவாக்கியுள்ளது. புதுச்சேரி வந்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி, டாக்டர். சவுமியா சுவாமிநாதனுடன் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை ஆய்வு செய்த டாக்டர்.சவுமியா சுவாமிநாதன் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதன் பிறகு புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் ஒப்புதலின் பேரில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள், நிறுவனங்கள், ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்,

அதன்படி, சாதாரண கரோனா சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.3,250 ம், வெண்டிலேட்டர் அல்லது என்ஐவி(ஆக்ஜிசன் உதவி) இல்லாத அவசர சிகிச்சைக்கு ரூ.5,480 ம், என்ஐவியுடன் கூடிய அவசர சிகிச்சைக்கு ரூ.5,980 ம், வெண்டிலேட்டருடன் கூடிய அவசர சிகிச்சைக்கு ரூ.9,580 ம், வெண்டிலேட்டர் இல்லாத செப்சிஸ்(தீவிர நோய்த்தொற்று) சிகிச்சைக்கு ரூ. 6,280 ம், வென்டிலேட்டருடன் கூடிய செப்சிஸ் சிகிச்சைக்கு ரூ.10,380 ம், வெண்டிலேட்டருடன் செப்டிக் ஷாக்(ரத்தத்தில் நோய்தொற்று) அல்லது பல்லுறுப்பு செயலிழப்பு அறிகுறியுடனான சிகிச்சைக்கு ரூ.10,380 ம் கட்டணமாக நிர்ணயமிக்கப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர், சிபிநாட், ட்ரூநாட் பரிசோதனைகளுக்கு ரூ.2,400 (ஒரு பரிசோதனைக்கு) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட கட்டணங்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அல்லது அவசர சிகிச்சைப் பிரிவு அறை வாடகை, நிர்வாகக் கட்டணங்கள், செவிலியப் பணி, கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு கட்டணங்கள், அடிப்படை ஆலோசனை கட்டணங்கள், மருந்துகள் மற்றும் விசாரணைகள், ஆக்ஸிஜன், வசதி, பாதுகாப்பு கவச உடை (ஒரு நாளுக்கு), ஒரு நபருக்கு ஒரு நாளைக்கான சத்துள்ள உணவு மற்றும் கிருமிநீக்க கட்டணத்தையும் உள்ளடக்கியது. புதுச்சேரி அரசு, தனியார் மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்களுக்கு பரிந்துரைத்து அனுப்பும் நபர்களுக்கு மேற்கண்ட கட்டணம் ஏதும் நிர்ணயிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 40

0

0