பாஜக அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழ வேண்டும்: நாராயணசாமி வேண்டுகோள்

19 September 2020, 5:45 pm
Pondy CM - Updatenews360
Quick Share

புதுச்சேரி: மாநில அரசு, மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி நீட்தேர்வை நடத்தி மாணவர்களின் உயிரோடு விளையாடும் பாஜக அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழ வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் புதுச்சேரியில் கொரோனா நோயை கட்டுப்படுத்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், பரிசோதனையின் எண்ணிக்கையை தினமும் 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்த நாராயணசாமி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் தனியார் கிளினிக் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் விபரத்தை அரசுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மேலும் அரசின் விதிமுறைகளை கடைபிடிகாத வணிக நிறுவனங்களையும் சீல் வைக்கப்படும் என நாராயணசாமி எச்சரித்தார்.

மேலும் இறப்பு விகிதத்தை தணிக்கை செய்ய மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும்
மக்களின் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இறப்பு விகிதத்தை குறைக்க முடியும் என தெரிவித்தார், தொடர்ந்து பேசிய அவர் இந்தியா முழுவதும் விவசாய பொருட்கள் ஒரே வியாபாரம் என்ற நோக்கில் பெரிய முதலாளிகளை கொண்டு கொள்முதல் செய்து அவர்கள் கையிருப்பு வைத்துக் கொண்டு அவர்கள் விற்பனை செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதா அமைந்துள்ளது என்றும் சாதாரண மற்றும் நடுத்தர விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்த அவர் புதுச்சேரி விவசாயிகள் முழுமையாக எதிர்க்கிறார்கள், மாநில அரசு கருத்துகளை மத்திய அரசு கேட்க வேண்டும் என்றார்.

மேலும் மாநில அரசு, மாணவர்கள், மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் கடும் எதிர்ப்பை மீறியும் நீட்தேர்வு நடத்தியுள்ளார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டார்கள். இதன் மூலம் ஏற்பட்ட மாணவர்களின் உயிரிழப்புக்கு பாஜக அரசு பொறுபேற்க வேண்டும் இதை எதிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் கொதித்து எழ வேண்டும் இது மக்கள் பிரச்சினை, பாஜக விற்கு தகுந்த பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.