குமரியில் நீடிக்கும் கோடை மழை: பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!

13 April 2021, 5:38 pm
pechipaarai - updatenews360
Quick Share

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கோடை மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

குமரி கடல் பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. இரவு இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இன்று அதிகாலையிலும் மழை பெய்தது.

திற்பரப்பு அருவி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அங்கு அதிகபட்சமாக 36 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கோழிப்போர் விளை, திருவட்டார், குருந்தன்கோடு, அடையா மடை, இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.40 அடியாக உள்ளது. அணைக்கு 359 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 72 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 52.41 அடியாக உள்ளது. அணைக்கு 54 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Views: - 25

0

0