ஏரி நிரம்பியதால் ஊருக்குள் புகுந்த மழைநீர்;பொதுமக்கள் அவதி…
Author: kavin kumar3 November 2021, 1:51 pm
கள்ளக்குறிச்சி: அத்தியூர் பெரிய ஏரி நிரம்பியதால் வீடுகளுக்குள் புகுந்த நீரை அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலை அருகே உள்ள அத்தியூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் தொடர் மழையின் காரணமாக நிரம்பியதால், ஊருக்குள் புகுந்த மழைநீரால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக மிதமான மழை இரவு முழுவதும் பெய்து வருகிறது. இதன் காரணமாக பகண்டைகூட்டு சாலை அருகே உள்ள அத்தியூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி முழுவதும் நிரம்பி கோடி போகிறது. இந்த நிலையில் அதிகபடியான மழைநீர் வெளியேறியதால் அத்தியூர் கிராமத்தில் உள்ள 3க்கும் மேற்பட்ட தெருக்களில் வெள்ள நீர் புகுந்தது.
இதனால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர். கோடி போகும் வாக்கால் முறையாக தூர் வாரப்படாததும், ஏரியை தூர் வாரி ஆழப்படுத்தாதுமே நீர் ஊருக்குள் வர காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுவதற்குள் அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ச்சியாக இப்பகுதியில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0
0