நியாய விலை கடையிலிருந்து பட்டப்பகலில் ரேஷன் அரிசி கடத்தல்: நியாயவிலைக் கடை ஊழியர் சஸ்பெண்ட்

Author: Udhayakumar Raman
9 September 2021, 3:31 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் காவல் நிலையம் அருகிலேயே செயல்படும் நியாய விலை கடையிலிருந்து பட்டப்பகலில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த நியாய விலைக் கடை ஊழியர் சஸ்பெண்ட்
செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்கு உட்பட்ட யாகசாலை மண்டபத் தெருவில் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் அருகே உள்ள இந்த நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு அரசு வழங்கும் இலவச அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, உள்ளிட்ட பொருட்களை நியாய விலை கடை விற்பனையாளர் முறையாக வழங்குவதில்லை என பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் நியாயவிலைக் கடையில் இருந்து 3 மூட்டைகளில் தரமான அரிசி கடத்துவதை கண்டுபிடித்த அப்பகுதி மக்கள் அரிசி கடத்தி சென்ற வரை துரத்திப் பிடித்தனர்.

பொதுமக்கள் துரத்துவதை கண்ட அரிசி கடத்தல்காரர் மூட்டைகளை ரோட்டிலேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். தரமான அரிசி கடத்தல் குறித்து பொதுமக்கள், மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு நியாயவிலைக் கடையில் சோதனை மேற்கொண்டார். மேலும் அரிசி கடத்தப்பட்டது குறித்து நியாயவிலை விற்பனையாளர் செல்வத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டதால் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காவல் நிலையம் அருகே உள்ள நியாய விலை கடையில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 65

0

0