கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு…

14 August 2020, 10:02 pm
Quick Share

தருமபுரி: அரூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்து ஒன்றரை நாட்களாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே நாச்சினாம்பட்டி கிராமத்தில் கடந்த 12ம் தேதி சூரியபிரகாஷ் என்பவர் வெளியே சென்றுவருவதாக கூறி, வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். 13ம் தேதி காலை வரை அவர் வீடு திரும்பாததால் அவரது தந்தை செல்லக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் சூரியபிரகாஷை சுற்றுவட்டார பகுதியில் தேடி வந்தனர். அப்போது எங்கு தேடியும் கிடைக்காததால் அரூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் சூரியைபிரகாஷை காணவில்லை என்று சமூக வலைதளங்களிலும் தகவல்கள் பகிரப்பட்டு வந்த நிலையில் நேற்று லிங்காபுரம் பகுதியை சேர்ந்த அங்கமுத்து என்பவருக்கு சொந்தமான 100 அடி ஆழமுள்ள விவசாயம் கிணற்றில் வேலுசாமி என்பவர் அப்பகுதி வழியாக செல்லும்போது எதர்ச்சியாக கிணற்றை எட்டி பார்த்துள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை அறிந்த அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த சூரிய பிரகாஷை அரை மணி நேரம் போராடி எவ்வித காயமும் இன்றி உயிருடன் மீட்டனர். ஒன்றரை நாட்களாக உயிருக்கு போராடி கிணற்றில் தத்தளித்துக்கொண்டிருந்த இளைஞரை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Views: - 0

0

0