2020-2021 ஆண்டிற்கான வங்கிகளுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியீடு…

1 August 2020, 3:49 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர்கள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தின் 2020-2021 ஆண்டிற்கான வங்கிகளுக்கான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் மலர்விழி வெளியிட்டார்.

தருமபுரி மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி ஒவ்வொரு வருடமும் வங்கிகளுக்கான ஆண்டு கடன் திட்டத்தை தயார் செய்து வெளியிட்டு வருகிறது. அதனடிப்படையில் 2020 – 2021 ஆண்டிற்கு 5401 கோடியே 64 இலட்சம் ரூபாய் அளவில் கடன் திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த வங்கியின் கூட்டத்தில் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் மலர்விழி வெளியிட்டார். திட்ட அறிக்கையின் முதல் பிரதியை இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் திருமாவளவன் முன்னிலையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ஆர்த்தி பெற்றுக்கொண்டார்.

நபார்டு வங்கி தயாரித்த வளம் சார்ந்த கடன் திட்டத்தை கணக்கில் கொண்டு இந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை கடன் திட்டங்களுக்காக ரூ.4757.03 கோடியும், வேளாண்மை கடன் திட்டங்களுக்காக ரூ.3687.38 கோடியும், மேலும் இதில் வேளாண்மை முதலீட்டு கடன்களுக்கு ரூ.1156 கோடியும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக ரூ.1069 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த கடன் அளவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட வர்த்தக வங்கிகளின் பங்கு ரூ.4476 கோடியாகவும்,

கூட்டுறவு வங்கிகளின் பங்கு ரூ.345 கோடியாகவும், தமிழ்நாடு கிராம வங்கியின் பங்கு ரூ.476 கோடியாகும். திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசிய மாவட்ட ஆட்சியர் வங்கியாளர்களை கடன் திட்டத்தை திட்டமிட்டபடி செயல்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்கையும் எட்ட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அனைத்து அரசு துறைகள் மூலம் வழங்கப்படும் மானிய கடன் திட்டங்களையும் விரைவில் செயல்படுத்திட வேண்டும் என்று வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களையும் கேட்டுக்கொண்டார்.

Views: - 7

0

0