திருச்சி – தஞ்சை வழித்தடத்தில் உயர்மட்ட பறக்கும் பாலம் அமைக்க கோரிக்கை

5 February 2021, 3:24 pm
Quick Share

திருச்சி: பால்பண்ணை – துவாக்குடி சர்வீஸ் சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு திருச்சி – தஞ்சை வழித்தடத்தில் உயர்மட்ட பறக்கும் பாலம் அமைக்க வேண்டும் என சாலை விரிவாக்க பணிகளால் பாதிக்கப்படுவோர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை , பழைய பால்பண்ணை துவாக்குடி வரை சாலை விரிவாக்கப் பணிகளால் பாதிக்கப்படுவோர் கூட்டமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் காட்டூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் தலைமை வகித்தார். செயலாளர் ரகுநாதன், பொருளாளர் பிரேம் ஆனந்த் , ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில், திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவுபடுத்தும் பணிக்காக கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவற்றை இடித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இந்த திட்டத்திற்கு மாற்றாக சேலம் பெங்களூரு நகரங்களில் உள்ளது போல் உயர்மட்ட பறக்கும் பாலம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழித்தடத்தில் செல்லும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் கனரக வாகனங்கள் பயன்பெறும் வகையில் ரிங் ரோடு திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் , பழைய பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பு மக்கள் கோரி வருகின்றனர் .

அதேசமயம் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் வியாபாரிகள் , வழிபாட்டு தளங்கள் , குடியிருப்புவாசிகள் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெங்களூர் , சேலத்தில் உள்ளதுபோல் பறக்கும் பாலம் இந்த வழித்தடத்தில் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சர்வீஸ் சாலைக்கு பதிலாக பறக்கும் பாலம் அமைப்போம் என்று வாக்குறுதி அளிக்கும் வேட்பாளருக்கு மட்டுமே வியாபாரிகள் வாக்களிப்போம். இல்லையென்றால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் .

தேர்தல் புறக்கணிப்புக் காக வீடுகள், வியாபார ஸ்தலங்கள் போன்ற இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்வோம், இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் , துணை முதலமைச்சர் , எதிர்க்கட்சித் தலைவர் , நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து முறையிட திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 9 ஆம் தேதி இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார் .

Views: - 20

0

0