ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளில் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

5 August 2020, 8:44 pm
Quick Share

திருவள்ளூர்: பொன்னேரி அருகே நடைபெற்ற ஊராட்சிமன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமனிடம் ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளில் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான பலராமன் தலைமையில் மீஞ்சூர் ஊராட்சியில் உள்ள 55 ஊராட்சிகளை சேர்ந்த அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் சுயேச்சை உள்ளிட்ட ஊராட்சிமன்ற தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சிகளில் நடைபெறும் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்ள ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினரிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் பலராமன், அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கோரிக்கையை ஏற்றுகொண்டு ஊராட்சிகளில் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் முன்னதாக கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த சட்டமன்ற உறுப்பினர் கொரோனா வைரஸ் தடுப்பு அட்டையை அடையாள அட்டை போல் மாட்டிக்கொண்டு கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.