ஓசூரில் அதிகரிக்கும் கந்து வட்டி கொடுமை: கட்டுப்படுத்த சிறு, குறு தொழிற்சாலை உரிமையாளர்கள் கோரிக்கை

14 June 2021, 4:31 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஓசூரில் அதிகரிக்கும் கந்து வட்டி கொடுமையை கட்டுப்படுத்தக் கோரி சிறு குறு தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் கந்துவட்டி கொடுமையால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராஜேஸ்வரி லேஅவுட் பகுதியில் சிறு குறு தொழிற்சாலை நடத்தி வந்தவர் பாலாஜி. தொழில் சம்பந்தமாக ஓசூர் பகுதியை சேர்ந்த ரகுராம் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் பாலாஜி வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்காக ரகுராம் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பாலாஜிக்கும் ரகுராம் இருவரும் கடன் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ரகுராம் மற்றும் அவரது உதவியாளர்கள் மூன்று பேர் இணைந்து பாலாஜியை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ரகுராம் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடைய உதவியாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பாலாஜியின் மனைவி பிருந்தா மற்றும் அவரது 3 வயது மகள் மற்றும் ஓசூர் சிறு குறு தொழிற்சாலை உரிமையாளர்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கந்துவட்டி கொடுமையால் வாங்கிய பணத்திற்கு மேல் செலுத்தியும் மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்து எனது கணவரை வெட்டிக் கொலை செய்துவிட்டனர். ஓசூர் பகுதியில் அண்மைகாலமாக கந்து வட்டிக் கொடுமை அதிகரித்து வருகிறது. வாங்கிய பணத்திற்கு 10% வட்டி மேல் வட்டி வசூல் செய்கின்றனர் என்றும், தொழிற்சாலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் வங்கிகளிலிருந்து கடன் உதவி கிடைக்காத பட்சத்தில் வேறு வழியின்றி தனியாரிடம் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கந்துவட்டி கும்பல் இது போன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை அரசு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும், இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், கந்துவட்டி கொடுமையால் கொலை செய்யப்பட்ட பாலாஜியின் மனைவிக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் எனவும், அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Views: - 153

0

0