அரசு நிலத்துக்கு போலி பட்டா மூலம் ரூ.93 கோடி இழப்பீடு பெற்ற விவகாரம்: இருவரை கைது செய்து விசாரணை

23 June 2021, 11:57 pm
Quick Share

காஞ்சிபுரம்: சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக அரசு நிலத்துக்கு போலி பட்டா மூலம் ரூ.93 கோடி இழப்பீடு பெற்ற விவகாரத்தில் 30 கோடி ரூபாய் பெற்ற ஆசிஷ் மேத்தா மற்றும் 3 கோடி ரூபாய் பெற்ற செல்வம் ஆகிய இருவரையும் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கான நில எடுப்பின்போது தனியார் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. அப்போது 2000-ம் ஆண்டில் பீமன்தாங்கல் கிராமத்தில் அரசு நிலத்தை தனியார் நிலமாக பட்டா பெற்று ஆசிஷ் மேத்தா என்பவர் ரூ.30 கோடியும், செல்வம் என்பவர் ரூ.3 கோடியும் இழப்பீடு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆசிஷ் மேத்தா, செல்வம், அப்போதைய நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த ரூ.33 கோடியை திரும்ப வசூலிக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணயரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேபோல் முறைகேடாக பட்டா பெற்ற 36 ஏக்கர் நிலங்களின் பட்டாக்களை ரத்து செய்து நில நிர்வாக ஆணைய அலுவலகம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் நடத்திய விசாரணையில், மேலும் 46 ஏக்கர் நிலங்களுக்கு இதுபோல் தனியார் பெயரில் பட்டா மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த நிலங்களுக்கான பட்டாவையும் ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். மொத்தம் பட்டா ரத்து செய்யப்பட்ட 82 ஏக்கரில் பெரும்பாலானவை ஜமீன் ஒழிப்புச் சட்டத்தின்படி அனாதீனமாக மாற்றப்பட்ட நிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பீமன்தாங்கல் கிராமத்தில் மொத்தம் 82 ஏக்கர் நிலங்களின் பட்டா ரத்து செய்யப்பட்ட பிறகு தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தின் நில எடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்த பட்டா ரத்து செய்யப்பட்ட இடங்களில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட இடங்கள் வருகிறதா என்று ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின்போது 83 நபர்களிடம் இருந்து 9 ஏக்கர் நிலங்கள் எடுக்கப்பட்டிருப்பதும், இதற்காக ரூ.93 கோடி இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. அவர்களுக்கான பட்டா ரத்து செய்யப்பட்ட நிலையில் வழங்கப்பட்ட இழப்பீடு செல்லாது என்பதால் இந்த தொகை ரூ.93 கோடியை வசூலிக்க இவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நில எடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதேபோல் 6 வழிச்சாலைக்காக பீமன்தாங்கல் தவிர்த்து தாமல், ஏனாத்தூர், வேடல், ஸ்ரீபெரும்புதூர், பென்னாத்தூர் உள்ளிட்ட கிராமங்களிலும் நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஏதேனும் முறைகேடு நடைபெற்றுள்ளதா? என்றும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 2004-ம் ஆண்டு 4 வழிச் சாலை விரிவாக்கத்துக்காக இந்த 6 கிராமங்கள் உள்பட 31 கிராமங்களில் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. அங்கும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா? என்றும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்றப் பகுதிகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்றும் விசாரணை அறிக்கை அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 30 கோடி ரூபாய் பெற்ற ஆசிஷ் மேத்தா மற்றும் 3 கோடி ரூபாய் பெற்ற செல்வம் ஆகிய இருவரையும் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

Views: - 108

0

0