கையூட்டு பெற்று பக்தர்களை உள்ளே அனுமதித்த அர்ச்சகர்கள்: கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகம்

Author: Udayaraman
2 August 2021, 6:31 pm
Quick Share

திருச்சி: கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால் இன்றும் நாளையும் திருச்சி மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அர்ச்சகர்கள் கையூட்டு பெற்று பக்தர்களை உள்ளே அனுமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வருகிறது. மேலும் ஆடி கிருத்திகையை, ஆடி பதினெட்டு முன்னிட்டு, கோயில்களில் பொது மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், இன்று மற்றும் நாளை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் கோயில், வயலூர் முருகன் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய கோயில்கள் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு கடந்த 31ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் ஆறு கோவில்கள் இன்றும் நாளையும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லாமல் கோவிலின் நுழைவாயில் முன்பு அரசின் அறிவிப்பை பதாதைகளை எழுதி வைத்தனர். இதனால் பெரும்பாலான பொதுமக்கள் கோவிலுக்கு வருபவர்கள் கோயில் நுழைவாயிலில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். இதேபோன்று சுற்றுலாத் தலங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பணிபுரியும் நபர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் பின்பகுதியில் கதவை திறந்து சாமி தரிசனத்திற்கு அனுமதித்து வருகின்றனர்.

இதனால் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்ற அச்சத்தால் இன்றும் நாளையும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்தும் இதுபோல் பக்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு உள்ளே அனுமதிக்க கூடாது என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கல்யாணி டம் கேட்டபோது நான் விசாரிக்கிறேன் என்று மழுப்பலாக கூறி போனை துண்டித்து வைத்துள்ளார்.

Views: - 87

0

0