சரக்கு வாகனங்கள் மோதி விபத்து: இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த தாய்-மகன் உயிரிழப்பு…
26 August 2020, 9:45 pmஈரோடு: கோபி முக்கிய சாலையில் சரக்கு வாகனங்கள் மோதி விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த தாய்-மகன் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடியில் இருந்து கொப்பரை தேங்காய்களை ஏற்றிக்கொண்டு குன்னத்தூர் செல்வதற்காக வந்த பிக்கப் ஆட்டோவும், கோபி செட்டிபாளையத்தில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி வந்த வேனும், அரியப்பம்பாளையம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வேன் கவிழ்ந்து நீண்ட தூரம் இழுத்துச் சென்று அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த கொத்துக்காடு கிராமத்தை சேர்ந்த சின்னம்மாள் (60) மற்றும் அவரது மகன் சுவாமிநாதன் (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த தாய்-மகன் இருவரும் கட்டிட தொழிலாளர்களாவர். இரண்டு சரக்கு வாகனங்கள் மோதியதில் வேன் கவிழ்ந்து தாய்-மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தால் சத்தியமங்கலம் – கோபி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.