வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய நான்கு நபர்கள் கைது: சுருக்கு கம்பி மற்றும் மான் இறைச்சி பறிமுதல்

3 March 2021, 6:55 pm
Quick Share

ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய நான்கு நபர்களை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்து, சுருக்கு கம்பி மற்றும் மான் இறைச்சி பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. இவைகள் அடிக்கடி சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டு வருகின்ற சம்பவம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டைக்காக வனப்பகுதியில் நேற்று சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் பீக்கிரிபாளையம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 4 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். இதில் பீக்கிரிபாளையத்தை சேர்ந்த மாரி, திப்பன் மற்றும் புளியங்கோம்பை பகுதியை சேர்ந்த பெரியசாமி, மாரிமுத்து என்பது தெரியவந்தது.

மேலும் சுருக்குக் கம்பிகள் மூலம் மான்களை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக அவர்களை கைது செய்த சிறப்பு அதிரடிப்படையினர் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து மான் இறைச்சி மற்றும் மான்களை வேட்டையாட வைத்திருந்த சுருக்கு கம்பிகள் ஆகியவற்றை கைப்பற்றி அதனையும் ஒப்படைத்தனர். இதன் பேரில் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

Views: - 8

0

0