லாரியில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

18 June 2021, 4:56 pm
Quick Share

நீலகிரி: கோத்தகிரி குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரியில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரி சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் அரசின் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் இன்னும் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படவில்லை. எனவே மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஒரு சிலர் வாகனங்கள் மூலம் மதுபாட்டில்களை கடத்தி கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமவெளி பகுதியிலிருந்து குஞ்சப்பனை சோதனை சாவடி வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி, கோத்தகிரி சப் இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது லாரியில் சாக்குபைகளுக்கு கீழ் மது பாட்டில்கள் மறைத்து வைத்து கொண்டு வந்தது போலீசாரின் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மது பாட்டில்களை கடத்தி கொண்டு வருவதற்கு பயன்படுத்திய லாரி மற்றும், 69 மது பாட்டில்களை பறிமுதல் செய்து கோத்தகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கோத்தகிரி சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் ,மது பாட்டில்களை கடத்தி வந்த லாரியை ஓட்டி வந்த கூடலூர் அனுமாபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகனான சந்தோஷ் குமார் (வயது 32) மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

Views: - 126

0

0