ஆன்லைன் பண பரிவர்த்தனையை கண்காணிக்க தனி குழு: தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தா பேட்டி

4 March 2021, 7:15 pm
Quick Share

திருவாரூர்: ஆன்லைன் பண பரிவர்த்தனையை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சாந்தா கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாந்தா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- மாவட்டம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 11000 தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 10 ஆரம்ப சுகாதார மையங்களிலும், இரண்டு அரசு மருத்துவமனைகளில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மேலும் 2 தனியார் மருத்துவமனையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று நாட்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் அமைக்கப்பட்டது செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக 6 புகார்கள் வந்துள்ளதாகவும், அதுதொடர்பாக வழக்கு பதிவு செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும் ஆன்லைன் பண பரிவர்த்தனை தொடர்பாக தனி குழு அமைக்கப்பட்டு வங்கிகள், வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு, ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்வோரை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அவர்களின் விவரங்கள் சேமிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சுய உதவி குழுக்களை பொருத்தவரை ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன் அறிவிக்கப்பட்ட கடன்களை வழங்குமாறும் மீண்டும் புதிய கடன்கள் வழங்க கூடாது எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு நகை, பாத்திரம் போன்ற பொருட்கள் வாங்க பணம் எடுத்து செல்வோரின் நலனுக்காக அவசர தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மனு அளித்து உடனடித் தீர்வை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

Views: - 2

0

0