2 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர் கைது

29 September 2020, 3:34 pm
Quick Share

திருவள்ளூர்: சோழவரத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு தலைமறைவான நபரை திருவண்ணாமலையில் போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் எஸ்.பி.கே நகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மனோகரன். இவர் தனது மனைவியை பிரிந்து கடந்த 2 ஆண்டு காலமாக அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் தனது வீட்டின் அருகே இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர்களை தங்கள் வீட்டில் பூ செடிகள் அதிகம் உள்ளது. அதில் உள்ள மலர்களை பறித்து செல்லுங்கள் என ஆசை வார்த்தை கூறி வீட்டிற்குள் இருவரையும் தனித்தனியாக அழைத்துச் சென்று இரண்டு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமிகள் பெற்றோரிடம் அளித்த தகவலின் பேரில் சிறுமிகளின் பெற்றோர் இருவரும் சோழவரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து மனோகரன் மீது பொன்னேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 10ஆம் தேதி புகார் செய்யப்பட்டு போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் தலைமறைவான மனோகரனை போலீசார் தேடி வந்த நிலையில், திருவண்ணாமலையில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். 8 வயது மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி மனோகரனை விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.