சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பொது தரிசனம் ரத்து

Author: Udhayakumar Raman
29 June 2021, 1:56 pm
Quick Share

திருவள்ளூர்: பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நேற்று திறக்கப்பட்ட நிலையில் பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டு இன்று கோவில் மூடப்பட்டதால் பக்தர்கள் வேதனையுடன் திரும்பிச் செல்கின்றனர்.

சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று காலை முதல் கோயில்கள் திறக்கப்பட்டு வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பொதுமுடக்கத்தின் கூடுதல் தளா்வுகள் அறிவிப்பில், சென்னை உள்பட 4 மாவட்டங்ககளில் மட்டும் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து நேற்று கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதை தடுக்கும் வகையில், பொது தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது.

இதையடுத்து ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பக்தர்கள் செல்ல கூடாது என காவல்துறையினரால் எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். போலீசாரின் கட்டுப்பாடு மற்றும் தடைகளை மீறி சென்ற சில பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றபடி கோபுர தரிசனம் செய்தபடி சென்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில் நேற்று திறக்கப்பட்ட நிலையில், மறுநாளே பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டு கோவில் மூடப்பட்டதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் வேதனை அடைந்தனர். அருகில் உள்ள பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து பொங்கல் வைத்து நேத்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்து செல்கின்றனர்.

Views: - 133

0

0